கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார்
நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன்
இயக்குனர்-சுசீந்திரன்
இசை-இமான்
ஓளிப்பதிவு-குருதேவ்

ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த குழந்தைகளில் ஒருவர் சசிகுமார்.

மேலும் இதே கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பத்து பேரை தேர்வு செய்து சிறந்த வீராங்கனைகளாக்கும் முயற்சியில் கபடி பயிற்சி கொடுத்து வருகிறார் பாரதிராஜா. ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

இதனால் வீராங்கனைகளுக்கு சசிகுமாரை பயிற்சி அளிக்கும் படி பாரதிராஜா கேட்க, அவரும் சம்மதித்து திறமையாக பயிற்சி அளித்து பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறக்கூடிய சிறந்த அணியாக உருவாக்குகிறார். இந்நிலையில், இந்த குழுவில் இருக்கும் பெண், இந்திய அணியில் விளையாட தேர்வாகிறார்.

ஆனால் மேல் பொறுப்பில் இருக்கக்கூடிய முரளி ஷர்மா 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் அந்த டீமில் விளையாட முடியும் என்று கூறுகிறார். இதனால் மன வேதனை அடையும் அந்த பெண், விபரீத முடிவு எடுக்கிறார்.

இறுதியில் அந்த பெண் எடுத்த முடிவு என்ன? பாரதிராஜா, சசிகுமார் இருவரும் இதை எப்படி கையாண்டார்கள்? இந்திய அளவில் கபடி வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்திருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்கள் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டுப் பெண்களை கபடி விளையாட வைத்து, அவர்களின் குடும்பம் உயர பாடுபடும் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்.

அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காண்பிக்கிறது.

சசிகுமாரின் தோற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. பாரதிராஜாவும் இவரும் படத்தில் அப்பா மகன் போல வந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு உரசல் வந்துகொண்டே இருக்கிறது. அந்த உரசலை மிக அழகாக கையாண்டிருக்கிறார் சசிகுமார்.

குறிப்பாக படத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக இவர் பேசும் வசனங்கள் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. அதை இவர் பேசும்போது மிக சிறப்பாக உள்ளது. இப்படத்தில் இவருக்கு நாயகி எதுவும் இல்லை என்றாலும் அதைப் பற்றி சிந்திக்கவே வாய்ப்பில்லாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

ஒரு கபடி பெண்கள் டீமுக்கு பயிற்சியாளராக வருகிறார் சூரி. சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கும் படியாக செய்திருக்கிறார் அதேபோல் திருமணம் செய்த அன்றே தன் மனைவியைப் கபடி போட்டிக்கு அனுப்பி வைக்கும் இளைஞரும் மனதில் நிற்கிறார்.

உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா நடித்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது, இவர் மீது கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் திறம்பட செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய பதிவை அழகாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் சுசீந்திரன் கபடி போட்டி மையப்படுத்தி கிராமத்து பெண்களை ஒருங்கிணைத்து ஒரு எளிமையான கதையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். படத்தில் அனைத்தும் எதார்த்தமான காட்சிகளாக பதிவு செய்திருப்பது சிறப்பு.

வீராங்கனைகளை தேர்வு செய்து இருப்பதிலேயே பாதி வெற்றி கண்டிருக்கிறார். களத்தில் விளையாடும் வீரர்களின் மனநிலையை பாரதிராஜா, சசிகுமார் இவர்களுக்கு இடையிலான உரசலினால் வீரர்கள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை சுசீந்திரன் கொஞ்சம் சிந்தித்து காட்சி கொடுத்திருக்கலாம்.

இறுதிப் போட்டியில் இருக்கக்கூடிய வீரர்கள் பயிற்சியாளர்கள் மனநிலை மாறி இருக்கும் போது வெற்றி பெறுவது கடினம். இது விளையாட்டு வீரர்களுக்கு நன்கு புரியும்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். குருதேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கென்னடி கிளப்’ குட் கேம்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles